காட்சிச் சுருக்கம்
அமைதி இழந்து, அன்பிழந்து, அறம் இழந்து துயரப்பட்ட உலகம். இதை சீர்செய்ய உலகுக்கு ஒருவர் வருவார் என்ற நம்பிக்கை எல்லா மதங்களிலும் வலுப்பெற்ற காலம். நம்பிக்கையோடு மெசியா ஒருவரை எதிர்பார்த்திருந்த காலகட்டம்.
காலம் நிறைவேறியது. காத்திருந்த மக்களை நேரில் கண்டிட, கன்னி மடியில் உலக மீட்பர் உதித்தார்.
எத்தனை சவால்கள், குறுக்கீடுகள், நிந்தைகள், அவமானங்கள், ஏமாற்றங்கள். இருந்தும், இறைவன் களப்பணியில் பின்னடைவில்லை.
அரக்கர் கூட்டம் எதிர்க்கிறது. இருள் அமர்க்களப் படுகிறது. தலைவரை முடித்துக் கட்ட சதி நடக்கிறது. பாவம் பயங்கர வடிவம் எடுத்து, பரமன் முன் தெரிகிறது.
அநீதியை எதிர்த்து உரிமை கோரியதற்காக, நியாயமற்ற தண்டனை! கைது, வசை மொழிகள், சித்திரவதை. ஈயக் குண்டுகள் கட்டிய வார்களால் அடிக்கிறார்கள். துடிக்கும் உடல், கிழியும் தசை, பெருகும் காயம், பாயும் குருதி. இழி சொற்களும், பழி வசைகளும் மனதை வாட்டுகின்றன.
சிலுவை சுமந்து, கல்வாரி நோக்கி நடக்கிறார் இயேசு. மீதமிருந்த உடையையும் களைகிறார்கள். காறினர், துப்பினர், தூற்றினர். கை கால்களில் ஆணியேற்றி, ஆவேசமாக சிலுவையில் அறைகிறார்கள். துடி துடித்து இறந்தவரை அனாதை போன்று அடக்கம் செய்கிறார்கள்.
கடவுளுக்கும் கல்லறையா? கல்லறைக்கும் காவலா? பகலவன் முன்னே பனித்துளியா? அலைகடல் முன்னே அசை துரும்பா? வாழ்வின் ஊற்று முன் சாவின் நாற்றமா? சாவை வென்று, வெற்றி வீரராய் மீண்டும் களம் கண்டு காவியம் படைக்கிறார்...
“காவியக்களம்”