காவியக்களம்
(ஒரு கண்ணோட்டம்)

அருட்கலாநிதி நீ.மரியசேவியர் அடிகளால் 1965ம் ஆண்டு ஈழத்தில் ஸ்தாபிக்கப்பட்ட திருமறைக் கலாமன்றம், தற்போது கனடா உட்பட உலகின் பல பாகங்களிலும் கிளைகளைக் கொண்டுள்ளது. 1993ம் ஆண்டு முதல் கனடாவில் இம்மன்றம் அரச இன மத அரசியல் சார்பற்ற ஒரு கலைமன்றமாக இயங்கி, வருடாவருடம் பல கலை நிகழ்ச்சிகளை நடாத்தி வருவது யாவரும் அறிந்ததே.

அந்த வகையில் பங்குனி 20ம் திகதி மாலை ரொறன்ரோவின் டொன்மில்ஸ் எக்லின்ரன் சந்திக்கருகே அமைந்துள்ள கனடா கிறிஸ்தவக் கல்லூரிக் கலையரங்கிலே பக்திப் பரவசமான ‘காவியக்களம்’ என்ற யேசுவின் திருப்பாடுகள் காட்சி, மிகவும் சிறப்பாக மேடையேறி பலரது பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

சட்டத்தரணி நாதன் சிறீதரன், காப்புறுதி முகவர் அப்துல் இப்ராஹிம், சட்டத்தரணி பெலின்டா யேசுதாசன், அருட்திரு.பீற்றர் ஜித்தேந்திரன், எஸ்.இராசநாயகம், ஜீவம் பொனிபஸ், எக்ஸ்.ஆர்.பிரான்சிஸ் ஆகியோர் மங்கள விளக்கேற்றினர்.

ரொறன்ரோ தமிழ் பங்குத்தந்தை அருட்திரு.க. அருள்நேசன், வரசித்தி விநாயகர் ஆலய பிரதம பீடாதிபதி கலாநிதி சிவசிறீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள், சட்டத்தரணி தம்பையா சிறீபதி, சட்டத்தரணி பெலின்டா யேசுதாசன், மொன்றியல் தமிழ் பங்குத்தந்தை அருட்திரு. தவராஜசிங்கம், திருமறைக் கலாமன்றத்தின் தலைவர் எலியாஸ் அருளானந்தம் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். அதனைத் தொடர்ந்து இசைத்தென்றல் மடுத்தீனுப்பிள்ளை யேசுதாசன் நெறியாள்கை செய்து இசையமைத்த ‘காவியக்களம்’ மேடைநிகழ்வு ஆரம்பமானது.

அமைதி இழந்து, அன்பிழந்து, அறமிழந்து துயரப்பட்ட உலகம். அதைச் சீர்செய்ய உலகிற்கு ஒருவர் வருவார் என தீர்க்கதரிசிகளால் எடுத்தியம்பிய காட்சியைத் தொடர்ந்து இயேசுவின் பிறப்பு, திருமுழுக்கு, சாத்தானின் சோதனைகள், இயேசுவின் போதனைகள், புதுமைகள் போன்ற நிகழ்ச்சிகள் மிக அழகாகக் சித்தரிக்கப்பட்டதுடன், பின்னணி இசையை மேடையில் நேரடியாக வழங்கிய நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டினர்.

பரிசேயர், தலைமைக் குருக்கள் ஒன்றுசேர்ந்து சதித்திட்டம் தீட்டி மந்திராலோசனை செய்து இயேசுவைக் கைதுசெய்யத் திட்டமிடும் காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்தன.

கடைசி இராப்போசன விருந்து, ஜெத்சமெனித் தோட்டத்தில் துன்பம், யூதாசின் காட்டிக் கொடுப்பு, பிலாத்துவின் முன் விசாரணை போன்றனவும் மிக லாவகமாக அமைக்கப்பட்டிருந்தன.

கற்றூணில் கட்டி அடித்து, முள்முடி தரித்து, மரணத் தீர்வையிடப்படும் காட்சிகள் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தின. இயேசுவின் சிலுவைப் பாதை, சிலுவையில் மரணம் போன்றன உயிரோட்டமுள்ள காட்சிகளாக அமைந்து, பார்வையாளர்களைச் சிந்திக்க வைத்தன.

கிறிஸ்தவர்களின் தவக்கால நிகழ்ச்சியாக ‘காவியக்களம்’ நடாத்தப்பட்டதனால், மக்களை இறைவன்பால் இழுக்கும் ஒரு உந்துசக்தியாகவும் ஆன்மீகாPதியாக ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓர் உன்னத நிகழ்வாகவும் இத் திருப்பாடுகளின் காவியம் அமைந்தது.

இந்த கலைக்காவியத்தைப் பார்க்க வருகை தந்ததுடன், திருமறைக் கலாமன்றத்தைப் பாராட்டி வாழ்த்திய கௌரவ விருந்தினர்கள் அனைவரும், குறிப்பாக மதிப்பிற்குரிய பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்களது நல்மனதை எம்மனம் பாராட்டவும் கடமைப்பட்டுள்ளது.

இதை சிறந்த முறையில் நடாத்த, தியாக மனப்பான்மையுடன் செயற்பட்ட கனடா திருமறைக்கலாமன்ற உறுப்பினர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஒலி ஒளி அமைப்பாளர்கள், மேடை மற்றும் ஒப்பனைக் கலைஞர்கள், தொண்டர்கள் அனைவரும் பாராட்டிற்குரியவர்கள். இந்நிகழ்ச்சியை நெறியாள்கை செய்து வெற்றிகரமாக நடாத்திமுடிக்க உதவிய இசைத்தென்றல் ம.இயேசுதாசன் அவர்கள், தனது ஆற்றலின் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு பார்வையாளரையும் சிந்திக்க வைத்தது ‘காவியக்களம்’.

ஆர்.எல்.எக்ஸ்.

HOME
Back to the Photo Page